Cart is Empty
by காசி.வேம்பையன்
மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர் விளைச்சல்’ என்ற ஆசையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று,செயற்கை இடுபொருட்களின் மூலமும், இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மண்ணின் உயிர்ச்சத்துகள் உறியப்படுவது தொடர்கதையாகிவிட்டது.வெத்து மண்ணாக இருந்த மொத்த மண்ணும்,சத்துமிக்க மண்ணாக மாறும் காலம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. ஆம்! பசுஞ்சாணம்,வைக்கோல், கால்நடைகளின் கழிவு என, விளைநிலத்தில் இயற்கை வழி இடுபொருட்களையே உரங்களாக மாற்றி,நாட்டு ரக விதைகளை நட்டு, சமவெளித் தொடங்கி மலைப் பிரதேசங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ளாமை செய்வதற்கான எளிய முறைகளை, இந்த நூல் நமக்குக் கற்றுத் தருகிறது.மேலும், இயற்கை விவசாயத்தில் குழியடிச்சான், மாப்பிள்ளைச் சம்பா, கூம்பாலை, சூரக்குறுவை, கருங்குறுவை, சீரகச்சம்பா என்று பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு விளைச்சல் செய்துவரும் விவசாயப் பெருமக்களின் உழவு அனுபவங்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன.கடந்த பல மாதங்களாக ‘பசுமைவிகடனி’ல் ‘மகசூல்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் காசி.வேம்பையன் எழுதி வெளிவந்த, இயற்கைவழி விவசாய அனுபவங்களில் தேர்ந்தெடுத்த தொகுப்பின் மொத்த பதிப்பு இது.இயற்கையோடு இயற்கையாக இணைந்து செயல்பட்டு,வளத்தின் அடிப்படையில் வருமானத்தைப் பெருக்க விரும்பும் விவசாயப் பெருமக்களுக்கான விவசாய வழிகாட்டி,இந்த நூல்.
RS. 63 More...by த.ஜெயகுமார்
காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டுவிட்டன. தன் சொந்த நிலத்தில்கூட உழைக்க மறந்து பாதை மாறிவிட்டனர். அதனால் விவசாயம் செய்ய ஆளில்லாமல் கரடுக் காடாய் மாறிக்கொண்டிருக்கின்றன விவசாய நிலங்கள். என்றாலும், விவசாயமே எங்களின் எல்லாமும் என எண்ணி உழைப்பவர்களும் இருக்கிறார்கள். விவசாயம் செய்ய ஆள் கிடைக்காவிட்டாலும் அவர்கள், தங்கள் நிலத்தை தரிசாக்காமல் செழிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பெருந்துணையாய் இருப்பவை விவசாயக் கருவிகள். அந்தக் கருவிகளைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு பற்றியும் கூறுகிறது இந்த நூல். தென்னை மரம் ஏற, நிலத்தை உழ, பூச்சி விரட்ட, கரும்பு வெட்ட, களை எடுக்க... என அனைத்து விதமான விவசாய வேலைகளுக்கும் இப்போது கருவிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட கருவிகளின் துணையால் விவசாயம் செய்து பயன் அடைந்தவர்களின் அனுபவங்களையும், எந்தெந்த கருவியை எதற்குப் பயன்படுத்தலாம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்த நூல். பண்ணைக் கருவிகளின் பயன்பாட்டையும் பராமரிப்பையும், விளக்கமாகக் கூறும் இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் பசுமை விகடனில் வெளிவந்தவை. அவற்றின் முழுத் தொகுப்பே இந்த நூல். பயனின்றிக் கிடக்கும் தங்கள் நிலங்களுக்கு பசுமையைப் போர்த்திவிட விவசாயிகளுக்கு இந்த நூல் நிச்சயம் உற்சாகம் ஊட்டும். கருவிகளின் பயன் அறியுங்கள், பயன்படுத்துங்கள், பயன்பெறுங்கள்!
RS. 67 More...by பொன்.செந்தில்குமார்
‘விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில், விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பயிரிட விவசாயிகளுக்குப் பயன்தரும் பல ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல். விவசாயம் தொடங்கி, கால்நடைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, பண்ணைகளைப் பராமரித்தல் என அனைத்து வகையினருக்கும் விரிவான விளக்கங்களை அள்ளித் தரும் நூல் இது. எல்லாவித சந்தேகங்களுக்கும் அந்தந்தத் துறையில் சிறந்துவிளங்கும் வல்லுநர்கள் விளக்கமளித்திருப்பதே இந்த நூலின் சிறப்பம்சம். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை’ பகுதியில் வெளிவந்த வாசகர்களின் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும், ஏற்கெனவே மூன்று தொகுதிகளாக வெளிவந்து மகத்தான வரவேற்பைப் பெற்றன. நான்காம் தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்த நூலில், ‘மண் புழு கரைசலால் மகத்தான மகசூல் கிடைக்குமா? காளான் வளர்ப்பால் கைநிறைய பணம் கிடைக்குமா? எந்தெந்த மரங்களை அரசாங்கத்தின் அனுமதியோடு வெட்டி விற்பனை செய்யமுடியும்? நண்டு வளர்க்க பயிற்சி உண்டா?’ என்பன போன்ற கேள்விகளுக்கு அரிய, உரிய தகவல்களை அளிப்பதோடு நின்றுவிடாமல், அதற்குரிய வல்லுநர்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை களைக் கொண்ட அரியதொரு பெட்டகமாய்த் திகழ்கிறது இந்நூல். இதை பசுமை விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பொன். செந்தில்குமார் தொகுத்துள்ளார். விவசாயம், விவசாயம் சார்ந்த துறையினருக்கு உற்ற நண்பனாக, ஆசானாக, இந்த நூல் வழிகாட்டும் என்பது மிகையல்ல!
RS. 74 More...by ஜல்லிப்பட்டி பழனிச்சாமி
இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுதல் தொடங்கி விமானத்தில் பணிபுரிவது வரை பல்வேறு பணிகளில் பெண்கள் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டு, வெற்றிபெற்ற பெண்களின் அனுபவங்களை அழகாகச் சொல்கிறது இந்த நூல். மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து, தேசிய அளவில் சிறந்த பெண்மணிக்கான பட்டத்தைப் பெற்றுள்ள, முதுகலைஜீ பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வி, பளபளக்கும் பட்டுக்கூடு வளர்ப்பில் விருதுபெற்ற பாப்பாத்தி, மார்கழி மற்றும் தையில் பெய்யும் பனியின் ஈரத்தைக்கொண்டே பனிக்கடலை பயிர் செய்யும் சாரதாமணி, பட்டை அவரையில் எட்டு டன் எடுக்கும் கவிதா, குறும்புடலையில் கொடிகட்டிப் பறக்கும் கௌசல்யா, கோழிக் கொண்டை பூ பூரிப்பில் தமிழரசி, எலுமிச்சையில் வெற்றிக்கனி பறிக்கும் ஜெயபாரதி, சின்ன வெங்காயம் சாகுபடியில் வஞ்சிக் கொடி, கனகாம்பரம் பூ விற்பனையில் பூங்கோதை என்று விவசாயத்தில் வெற்றிக்கொடி கட்டிய பெண்களின் பட்டியல் நீள்கிறது. மேலும், விவசாயம் சார்ந்த பண்ணைக் கோழி வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு பற்றியும் இங்கே சொல்லப்பட்டு இருக்கிறது. விவசாயத்தில் முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில், அத்தனை பேரின் விளைச்சல் நிலங்களுக்கே சென்று, அவர்களின் அனுபவங்களை ஆதாரங் களோடு தகவல்களைத் திரட்டி இந்த நூலில் கொடுத்துள்ளார் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி. இந்தக் கட்டுரைகள் பசுமை விகடனில் வெளி வந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உழைப்பால் உயர்வு பெற விரும்புபவர்களுக்கும், சாதிக்க நினைக்கும் விவசாயப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்தரும், இந்தப் புத்தகம்!
RS. 63 More...by விகடன் பிரசுரம்
மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும்
RS. 50 More...by ஆர்.குமரேசன்
உலக அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடிப்புத் தொழில்களை முறையாக அங்கீகரித்து, ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆடு&மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களைப்போல, சமீப காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது மீன் வளர்ப்புத் தொழில். கிணறு, ஆறு, குளங்களை நம்பி விவசாயம் செய்து நொடித்துப்போன விவசாயிகள்கூட இப்போது, மீன் வளர்ப்பதிலும், வளர்த்த மீன்களை சந்தைக்குக் கொண்டுசென்று விற்பதிலும் அதிக ஆர்வம் காட்டி, பொருளாதாரத் தேவைகளில் பூர்த்தி அடைந்து, தாங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியான பாதைக்குத் திருப்பி இருக்கிறார்கள். மீன் வளர்ப்புத் தொழிலில், குறைந்த முதலீட்டில், குறைந்த வேலை ஆட்களின் மூலமாக அதிக லாபத்தை அடைந்த பல விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களை பசுமை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார் ஆர்.குமரேசன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். மீன் குஞ்சு வாங்குதல், செயற்கைக் குளம் வெட்டுதல், தீவனம் தயாரித்தல், பராமரித்தல், நோய்த் தடுப்பு, விற்பனை என அனைத்துக்கும் விளக்கங்களைத் தருவதோடு, மீன் குஞ்சுகள் வளர்க்கும் நிலையம் அமைத்தல், மீன் தீவனம் தயாரிக்கும் நிலையம் அமைத்தல், புதிய குளங்கள் வெட்டுதல், பண்ணைக் குட்டைகள் வெட்டிதல், மீன் பிடி உபகரணங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு மத்திய&மாநில அரசு அமைப்புகளில் மானிய உதவி, கடன் வசதி பெறும் வழிகளையும் அட்டவணையாகத் தருகிறது இந்த நூல்.
RS. 53 More...by பொன். செந்தில்குமார்
நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், இந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி!’ எந்தெந்தப் பயிர்களுக்குக் கடன் தரப்படுகிறது, எவ்வளவு மானியம் தரப்படுகிறது, எந்த வங்கியை அணுக வேண்டும், யாரிடம் தொடர்புகொள்ள வேண்டும்... என்பன போன்ற அனைத்துத் தகவல்களையும் ஒன்றுவிடாமல் சேகரித்து எழுதி இருக்கிறார் பொன்.செந்தில்குமார். ஊருக்கெல்லாம் சோறுபோடும் விவசாயிகளுக்கு, அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அலைச்சலை மிச்சப்படுத்தி, மேன்மேலும் விவசாயத் தொழிலில் மேன்மை அடைய இந்த நூல் நிச்சயம் துணைபுரியும்!
RS. 70 More...