Cart is Empty
by ப.திருமாவேலன்
சென்னை சட்டசபையும், தலைமைச் செயலகமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய வளாகத்துக்கு மாறுகின்றன! வரலாற்றுப் புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது. சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரர்கள் வளைத்துப் போட்டனர். சென்னை வளர்ந்ததும் அதைப் பறிக்கப் பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் போட்ட போட்டியில் சென்னையே அதிர்ந்தது. ஆனாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளையக்கூட இல்லை, வளரத்தான் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டிய புரட்சிக்கு முதல் வித்திட்ட வேலூர்ப் புரட்சியை, ஆங்கிலேயர்களே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆரம்பித்துவைத்தது வரலாற்றின் வேடிக்கை. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் பல்வேறு நிலைகளை வடித்ததும் இந்தக் கோட்டையில்தான். இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ராபர்ட் கிளைவ், தான் தற்கொலை செய்துகொள்ள கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுக் கொண்டும் அது வெடிக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்தவர் சுட்டுப் பார்த்தபோது... அந்தத் துப்பாக்கி வெடித்தது! இதைப் போன்ற பல அபூர்வ சம்பவங்களைத் தொகுத்து, விறுவிறுப்பு குறையாம
RS. 50 More...by பார்த்திபன்
பலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப்புக்காக வரும் பிற மாவட்டக்காரர்கள் வரை அத்தனை பேரின் போக்குவரத்துகளையும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிற இந்தப் பெருநகரத்தின் வரலாறு சுவாரஸ்யம் மிக்கது. மிகுந்த தேடுதலோடு சென்னை மாநகரம் கடந்துவந்த நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் கணக்காக இந்த நூலை அற்புதப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர் பார்த்திபன். ‘தினத்தந்தி’ பத்திரிகையில் சென்னை குறித்த வரலாறு தொடங்கிய நாள் முதல் அதனை வாசித்துச் சிலிர்த்தவன் நான். ஆங்கிலேயர்களின் தலைமை இடமாக இருந்த புனித ஜார்ஜ் கோட்டையின் உருவாக்கம் தொடங்கி ராயபுரம் ரயில் நிலையம், சேப்பாக்கம் அரண்மனை, ரிப்பன் மாளிகை, ஆர்மீனியன் தேவாலயம்... என சென்னையின் காலத்திய அடையாளங்களாக விளங்கும் அத்தனை இடங்களின் வரலாறுகளையும் இந்த நூல் விவரிக்கும் விதம் ரொம்பவே அலாதியானது. ‘யார் இந்த பார்த்திபன்? இவ்வளவு விவரங்களை இவர் எங்கிருந்து தேடிப் பிடித்தார்? யாரும் விரல் நீட்டித் தவறு சொல்ல முடியாதபடி தனக்குக் கிடைக்கும் விவரங்களை இவர் எப்படிச் சரிபார்த்துக் கொள்கிறார்?’ என இந்தத் தொடரைப் படிக்கிறபோதெல்லாம் ஆச்சர்யம் என்னை ஆட்கொள்கிறது. சாலச்சிறந்த இந்தத் தகவல் திரட்டும், சுவாரஸ்யம் குன்றாத அழகு நடையில் அதனை வார்த்திருக்கும் விதமும் வாசிக்கும் அனைவரையும் சிலிர்க்க வைக்கும். இந்த 300 ஆண்டுகால நிகழ்வுகளைப் படிக்கிறபோது, மதராசபட்டின மக்களில் ஒருவராக நீங்கள் மாறுவீர்கள் என்பது உண்மை!
RS. 70 More...by செ.திவான்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.
RS. 77 More...by டாக்டர் ரா.நிரஞ்சனா தேவி
நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன். மைசூர் குடகு மலையில் பிறந்து தமிழ்நாட்டில் கடலுடன் கலக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்திலேயே பல அணைகள் கட்டப்பட்டு நீரைத் தேக்கிவைக்கிறார்கள். எஞ்சிய நீர் மட்டுமே தென்னக நெற்களஞ்சியமாம் தஞ்சையை எட்டுகிறது. ஆனால், கரிகாலன் காலத்தில், காவிரியின் குறுக்கே எந்தத் தடைகளும் இல்லாத சூழலில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பாயும் காவிரி எப்படி கரைபுரண்டு ஓடியிருக்கும்? அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும்? அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான்? - இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் வார்க்கிறது இந்தத் தேடுதல் நிறைந்த பதிவு. உண்மையான கரிகாலன் யார், அவனுடைய ஆட்சிச் சிறப்பு, போர்த் திறன், கல்லணை கட்டப்பட்டதின் தொலைநோக்குப் பார்வை, நீர்ப் பிரச்னை என நாம் அறியத் தவறிய சோழ மண்ணின் காலடித்தடத்தைக் கண்டுபிடித்து சுவைபடச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் ரா.நிரஞ்சனாதேவி. மாமன்னன் கரிகாலனைப்பற்றியும் கல்லணையைப்பற்றியும் இதுவரை எவரும் சொல்லியிராத அளவுக்கு செறிவுமிகுந்த கல்வெட்டுச் செய்திகளுக்கு நிகரான படைப்பு இது!
RS. 200 More...by செ.திவான்
காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஓர் அடிமை அரசன்தான் மாலிக்காபூர். சமூகக் குற்றவாளியாக, கொடூரனாக, மத நல்லிணக்கத்தை மிதித்தவனாக மாலிக்காபூரை பலரும் சொல்வது உண்டு. தென்னகப் படையெடுப்பு நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் சிலர், அவரைக் கொள்ளைக்காரனைப்போல் சித்திரித்தும், தென்னாட்டையே துவம்சம் செய்துவிட்டதுபோலவும் சொல்கிறார்கள். 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்த மாலிக்காபூரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவந்த நிகழ்வுகளையும் இந்த நூலில் ஆணித்தரமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். மேலும், சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளையும் விமர்சித்து வெளியான பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். வரலாற்று நிஜங்களை முற்றிலுமாக படித்து உணர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அழகாகக் கூறும் அற்புத நூல்களில் இதுவும் ஒன்று.
RS. 56 More...by சிவதர்ஷினி
மதம் ஒரு அபின் என்றார் மாமேதை லெனின். உலகத்தில் மதத்தை மையமாக வைத்துப் பல போர்கள் மூண்டுள்ளன. ஆனால், மதக் கிளர்ச்சி ஒன்று சுதந்திரத்துக்கான வித்து ஒன்றை விதைத்தது. வேறெங்கும் இல்லை; இந்தியாவில்தான்! ஆம்! சிப்பாய்ப் புரட்சி! இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன் தனது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் அடிமைப்படுத்தினான். இரு மதத்தினரின் பிரிவினைக்கு தூபம் போட்டான். பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவன் இரு மதத்தினரின் பிடியிலும் சிக்கிக்கொண்டான். எப்படி நடந்தது இது? 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்’ என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள்? எத்தனை படுகொலைகள்? குதிரையில் தன் குழந்தையைச் சுமந்துகொண்டு வீரப் போர் புரிந்த ஜான்ஸி ராணியின் தியாகம் எத்தகையது? ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது? வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தில், சிப்பாய்க் கலகத்தின் ஒவ்வொரு நிலையையும், கலகம் நடந்த நாட்களின் திகில் சம்பவங்களையும் கால வரிசையோடு அழகான நடையில் நமக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர் சிவதர்ஷினி. இந்த நூலைப் படித்தால் சுதந்திரத்தைப் பெற, தியாகிகள் சிந்திய ரத்தத்தின் சிறப்புகளை நம் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும்; சுதந்திரத்தின் அருமை தெரியும் என்பது திண்ணம்.
RS. 50 More...by சிவதர்ஷினி
அகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா? வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா? கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா? அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா? மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா? நிஜமாகவே ஆஸ்வால்டுதான் ஜனாதிபதியைச் சுட்டானா போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, கொலை வழக்கு விசாரணை முடியும்வரை நடந்த விவகாரங்கள் என்ன என்பதை துல்லியமாகச் சொல்கிறது இந்த புத்தகம். உலகமே வியக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது... எந்த வகையில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பன பற்றியெல்லாம் இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் சிவதர்ஷினி. ஜான் கென்னடி கொலைவழக்கு கடந்து வந்த பாதையை வரிசைப் படுத்தி, ஒரு துப்பறியும் நாவலைப் போன்று அடுத்தக் கட்டம் நோக்கிப் பக்கத்தைத் திருப்ப வைக்கிறார் நூலாசிரியர். இதுதவிர அமெரிக்க ஜனாதிபதிகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அலசியிருக்கிறது இந்த நூல். பரபரப்பான புத்தகம் இது.
RS. 50 More...by மு.ஸ்ரீனிவாஸன்
வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட போஜராஜன், கவி இயற்றுவதிலும் பாடல் புனைவதிலும் திறன் படைத்தவன் என்பது, ஏடுகள் எடுத்துரைக்கும் தகவல்களில் ஒன்று. இவனுடைய பிறப்பு தொடங்கி, இளமைக் காலம், நாடு, சமகாலத்து மன்னர்களுடனான உறவு, மேற்கொண்ட போர்கள், தலைநகர் தாரா நகரத்தின் தனிச்சிறப்பு, பின்பற்றிய சமயம், கட்டிய ஏரியின் பின்னணி, எழுதிய நூல்கள் என போஜராஜனின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படி எழுதியுள்ளார் நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாஸன். மேலும், கலைவாணியான சரஸ்வதி தேவிக்கு இவன் எழுப்பிய கோயில், சம்பூராமாயணத்தின் சாரம், சாலி ஹோத்ரா என்பதற்கான விளக்கம், ஆட்சிச் சிறப்பை விளக்கும் செப்பேடுகள், காலத்தை கடந்த நிகழ்வுகளை இன்றும் விளக்கிச் சொல்லும் கல்வெட்டுகள் என போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்துள்ளது இந்த நூல். போஜனின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொள்ள பிரியப்படும் வாசகர்களுக்கான வரப்பிரசாதம், இது. போஜராஜன் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாத குறையைத் தீர்க்க வந்துள்ளது இந்த நூல்.
RS. 50 More...by முத்தாலங்குறிச்சி காமராசு
ஜமீன்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க எப்போதுமே அளவுக்கதிகமான ஆர்வம் ஏற்படும். அந்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நெல்லை சீமையில் வாழ்ந்து வீழ்ந்த பத்து ஜமீன்களைப்பற்றி படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். ஒரு ஜமீனின் எல்லைக்குள் பல கிராமங்கள் இருந்தன. அங்கு நெல் அறுவடை செய்வது, வரி வசூல் செய்வது, காவல் வேலை உள்ளிட்ட பல பணிகளை ஜமீன்கள்தான் செய்து வந்தன. வரி வசூலித்து மன்னருக்குக் கொடுத்தது போக மீதியை அவர்கள் அனுபவித்துக்கொண்டனர். தங்களை மகாராஜாவாக எண்ணிக்கொண்டு ராஜ தர்பார் நடத்தி, ஒரு கட்டத்தில் தாங்கள்தான் எல்லாமும் என தான்தோன்றித்தனமாக வாழ ஆரம்பித்தனர். மிருகங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜமீன்தார்கள், மக்களை அடிமை போல நடத்தி, அராஜகம் செய்து பொதுமக்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தனர். விதிவிலக்காக சில ஜமீன்தார்கள், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் உயிரையும், பொருளையும்கூட இழந்துள்ளனர். அரசாங்கத்தால் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராஜாவாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் சாதாரண மனிதர்களாகிவிட்டனர். இந்த ஜமீன்களின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதை போல் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஜமீன்களின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களை அடிமைபோல் நடத்தி அராஜகம் செய்வோர் பின்னாளில் எத்தகைய நிலைமைக்கு ஆளாவார்கள் என்பதும் இந்த நூலின் மூலம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
RS. 133 More...by பூ.கொ.சரவணன்
எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்று பிரமிக்க வைத்தவர்கள் உருவானது எப்படி? வெற்றி சும்மா இருந்தால் வருமா? வெற்றியாளர்களின் மறுபக்கம் என்ன? வரலாற்றில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய சுவாரசியங்கள் நிறைந்த தகவல்களைத் தருகிறது இந்த நூல். வெற்றி பெறத்துடிக்கும் உங்களுக்குத்தான் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் போற்றப்படும் ஒருவர் பெர்னாட்ஷா. அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்குத் தகவல் சொன்னார்கள், “உங்களுக்கு நோபல் பரிசு ஷா” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்குக் கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை; “அது போன வருடம் எழுதியது, உயிருக்குத் தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்குக் கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ளப் போகவே இல்லை. இதுபோன்ற வரலாற்று மேதைகளின் மகத்துவம் நிறைந்த வாழ்வியலைப் பற்றி நிறைய தகவல்களை அள்ளித் தந்துள்ளார் நூலாசிரியர். பெர்னாட்ஷா சொன்னது போல.. வாழ்க்கை உங்களைக் கண்டடைவது இல்லை; உங்களைப் படைத்துக்கொள்வது என்பதற்கேற்ப உங்களை நீங்கள் படைத்துக் கொள்ள நீங்கள் படிக்க வேண்டியது இந்த வரலாற்று நாயகர்களை பற்றித்தான் என்பது இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்து கொள்வீர்கள். வாசியுங்கள்.. உங்களுக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்திருக்கின்றன.
RS. 172 More...