Cart is Empty
ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று பிரத்தியேகமாக காரெக்டர்களை உருவாக்கி, விகடன் நடுப்பக்கங்களில் அவர்களை மதன் உலா வரச்செய்த போது விலா நோகச் சிரித்து மகிழ்ந்தார்கள் வாசகர்கள். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா... இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மதன் ஜோக்குகளில் வாசகங்களை மட்டும் படித்துவிட்டுப் பக்கங்களைப் புரட்டிவிட முடியாது. அதற்கான படங்களையும் உற்றுக் கவனிக்க வைத்தவர் அவர். நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்கூட மதனின் கை வண்ணத்தில் வித்தியாசமாகத் தெரிவார்கள். அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரும், தொந்தியும் தொப்பையுமாக உருவத்தை வைத்துக் கொண்டு வேறு சிலருமாக... குறும்பு கொப்புளிக்கும் படங்கள் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட சமயத்தில் மதன் வரைந்த ஜோக்குகளும், கார்ட்டூன்களும் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த ஜோக்குகளின் தொகுப்புதான் இது.