Cart is Empty
ஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுதான் அடியெடுத்து வைத்தவர்கள். இப்போது அவர்களில் பலரும் பிரபலமாக வலம் வருகிறார்கள். வாழ்வியல், சூழல், முரண்பாடு, ஆவேசம் என தங்கள் வாழ்வின் அத்தனைவிதமான கூறுகளையும் சில வரிகளிலேயே இங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யதார்த்தவாதிகள். சில கவிதைகளைக் கடக்கையில் நெஞ்சு முழுக்க நிசப்தம் பரவுகிறது. அடுத்த கவிதையைப் படிக்கும் மனமின்றி முதல் கவிதையின் லயிப்பிலேயே சுருண்டு கிடக்கத் தோன்றுகிறது. தாயின் குடங்கைக்குள் ஒடுங்கிக்கொள்ளும் சிசுவைப்போல் இந்தப் புத்தகத்துக்குள் புதைந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஒன்றையன்று விஞ்சும் விதமாக இறைந்துகிடக்கும் கவிதைகள், ஒவ்வொரு பக்கத்தையும் மயிலிறகுப் பக்கமாக மலர்த்தி இருக்கின்றன. வாழ்ந்து கெட்டவனின் வீடு தொடங்கி இ-மெயிலில் வரும் இறப்புச் செய்தி வரை இந்தக் கவிதைகள் பந்திவைக்கும் விஷயங்கள் வன்மையானவை. ஒரே நேரத்தில் செவலையெனும் சித்தப்பாவுக்காக அழவைக்கவும், ‘ஏ... கோழையே...’ எனத் தீவிரவாதத்துக்கு எதிராக எழவைக்கவும் இந்தக் கவிதைகளால் முடிகிறது. நிறைய கவிதைகள், நம் நெஞ்சத்து நியாயத்தராசை வேகமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் சூத்திரங்களே இந்தக் கவிதைகள். 75 கவிதைகளையும் வாசித்து முடிக்கையில் வாழ்வின் கடைசிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிய உணர்வோடு நீங்கள் வெளிவருவீர்கள் - புது மனிதர்களாக!