பெரியோர்களே... தாய்மார்களே!

by:ப‌.திருமாவேலன்
Synopsis

தமிழகத்தின் அரசியல் வரலாறு, தமிழக வரலாற்றைப்போல் நெடியது. ஆனால், இங்கு அது ஏனோ அரைகுறையாகவே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் சென்னையில் வலுவாகக் காலூன்றிய பிறகு, தமிழக அரசியல் வரலாறு, ஆவணங்களுக்குள் வந்தன. ஆனால், அவை ஆங்கிலேயர்களின் நியாயங்கள் - இந்தியர்களின் சட்ட விரோதங்கள் என்ற துரோகப் பார்வையில் பதிவு செய்யப்பட்டவை. ஆங்கிலேயர்கள் விரட்டப்பட்ட பிறகு எழுதப்பட்ட தமிழக அரசியல் வரலாறு, இயக்கங்கள், கட்சிகளின் கொள்கைகள், அங்கு அதிகாரத்துக்கு வந்தவர்கள், அவர்களை முழுமையாக எதிர்த்தவர்கள் பார்வையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பதியப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் தேசியவாதம், கம்யூனிஸ்டுகளின் வர்க்கப் பார்வை, நீதிக்கட்சியின் சமூக நீதி, திராவிட இயக்கங்களின் சமூகச் சீர்திருத்தம், தமிழ் தேசியவாதிகளின் மொழி உணர்வு, தலித் இயக்கங்களின் ஒடுக்கப்பட்டோர் குரல்... என்று நெடிய பாதையில் பயணப்பட்டுள்ள தமிழக அரசியல் வரலாற்றில் விடுபட்டுப்போன பக்கங்கள் ஏராளம். எழுதுபவர்களின் சார்பு, விருப்பம், தேவை, நோக்கங்களுக்கு ஏற்ப, அது வளைத்து நெளிக்கப்பட்டது. அதில், சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து சனாதன தர்மங்களுக்கு எதிராகக் குரலெழுப்பியவர்களின் குரல் ஒலிக்கவில்லை. கோடீஸ்வரர்களாகவும் ஜமீன்தார்களாகவும் இருந்த, நீதிக்கட்சியின் தலைவர்கள் எளிய மக்களுக்கு ஆற்றிய பணிகள் பதிவு செய்யப்படவில்லை. ரஷ்யப் புரட்சிக்கு முன்பே தமிழகத்தில் கம்யூனிஸம் கால் ஊன்றிவிட்ட வர்க்க வரலாறும், திராவிடச் சிந்தனைகளுக்கான விதையை நட்டது அயோத்திதாசப் பண்டிதர் என்பதும் எழுதப்படவும் இல்லை... தெளிவாக விளக்கப்படவும் இல்லை. அப்படி விட்டுப்போனவற்றை, வேண்டுமென்றே விடப்பட்டவற்றை, தேடி எழுதி பதிவு செய்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் அறுந்துபோன கண்ணிகளை இந்த நூலில் கோர்த்துள்ளார் நூலாசிரியர் ப.திருமாவேலன். தொலைபேசியே அரிதிலும் அரிதான காலத்தில், உலகம் முழுக்க தனக்கான நெட்வொர்கை வைத்திருந்த சிங்காரவேலர் என்று தொடங்கி, திரு.வி.க., வ.உ.சி., ரெட்டைமலை சீனிவாசன், சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா, ஓமந்தூரார், பக்தவத்சலம், குமாரசாமி ராஜா, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று இந்த நூல் பரந்து விரிகிறது. வெறுமனே வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் குறிப்பாகவும், அரசியல் இயக்கங்களின் கொள்கை முழக்கங்களாகவும் மட்டுமே இல்லாமல், தனி மனிதர்கள் வரலாற்று நாயகர்களானது எப்படி? அதற்கான பின்னணி என்ன? அவர்களின் தியாகம் எத்தனை உன்னதமானது என்பதை எடுத்து விளக்கியதோடு, இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் அரசியல் ஏன் அவசியம் என்பதையும் பொட்டில் அடித்ததுபோல் உரைக்க வைக்கிறது. நூலை வாசிக்கும்போது, மற்ற வரலாற்று நூல்களைப் போல், புள்ளி விவரங்கள், காலக்கோட்டை அடுக்கி வாசகர்களை மலைக்க வைக்காமல், எளிய மனிதர்கள், மாணவர்கள் புரிந்துகொள்ளும் வாசிப்பை இந்த நூல் சாத்தியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பெரியோர்களே... தாய்மார்களே’ மூலம், தமிழக அரசியல் வரலாறை வாசிக்க அனைவரும் வாருங்கள்.

Buy the eBook
List Price RS .560
Your price
RS .392
You save Rs. 168(30%)

You can read this item using Vikatan Mobile App: