Cart is Empty
நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையில்தானே அது பொதிந்து இருக்கிறது. என்ன, ‘தோட்டத்துப் பச்சிலைக்கு வீர்யம் போதாது’ என்பதைப்போல அதை நாம் அலட்சியம் செய்துவிடுகிறோம் அல்லது கவனிக்கத் தவறிவிடுகிறோம். நாம் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக் கொண்டு இந்த நூலில் அறிவியலை ஆழம் பார்க்கிறார் நூலாசிரியர் அ.சுப்பையா பாண்டியன். இந்த நூலில் அடங்கி இருக்கும் சோதனைகளும் விளக்கங்களும் ‘அறிவியல், இவ்வளவு எளிமையாகவா இருக்கிறது?’ என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நூலில் இருக்கும் சோதனைகளையும், விஷயங்களையும் தெரிந்துகொண்டால் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் அறிவியலில் கொடிகட்டிப் பறப்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. கடினம், கசப்பு என்று நாம் நினைக்கும் அறிவியலை மிகவும் எளிமையாகக் கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். கூடவே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களும் விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. பெரியவர்களும் இவற்றைக்கொண்டு தம் மக்களுக்கு அறிவியலைச் சொல்லிக்கொடுக்கலாம். ‘சுட்டி விகடன்’ இதழ்களில் தொடராக வந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்!