Cart is Empty
நமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. இந்தியர்கள் சுவைமிக்க எந்த உணவையும் கலாசார பாரம்பரியத்தோடு இணைத்தே பார்ப்பார்கள் என்பதற்கு, விழாக்காலங்களில் அதிகம் சமைக்கப்படும் பிரியாணியே சிறந்த உதாரணம். வட இந்தியர்கள், ஏன் வெளிநாட்டுப் பயணிகளேகூட தமிழகம் வரும்போது இட்லி _ சட்னி, சாம்பாரை சுவைக்காமல் செல்வதில்லை. மதுரை, சென்னை போன்ற நகரங்களில் இட்லிக்கு என்றே தனி கடைகள் இயங்குவதுகூட பேறு பெற்ற இட்லியின் வான் அளாவிய பெருமைதான். இங்கு, இட்லியைக் கண்டுபிடித்தது நம்மவர்களே என்று நினைவு கூறி பூரிப்பு கொள்வோம். ஆனாலும், தினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட்&டிஷ் என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே ‘அவள் விகடன்’ ஒவ்வொரு இதழோடும் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது. அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பத்து வகை உணவின் செய்முறை விளக்கங்களும் நாவிற்கு சுவை தரும். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவில் பக்குவத்தையும் பாங்கையும் விரும்புகிற உங்களுக்கு இந்நூல் ஒரு சமையல் வரம்தான். இனி ஒவ்வொரு நாளும் உங்கள் சமையலறை கமகமக்கப் போகிறது... நா சப்புக்கொட்டப் போகிறது..!