Cart is Empty
இன்றைய பொருளாதார வாழ்க்கை முறையில் பணத்தை ஈட்டுவது என்பதைவிட, ஈட்டியப் பணத்தை எதில் முதலீடு செய்து பாதுகாப்பது என்பதுதான், தற்போதைய தலைமுறையின் பெருத்த சிந்தனை. பொதுவாக, சேமிப்பு-முதலீடு என்றாலே, நமக்குத் தெரிந்ததெல்லாம் ‘ஃபிக்ஸட் டெபாசிட்’ அல்லது ‘ரியல் எஸ்டேட்’தான். இவற்றையும் தாண்டி விதவிதமான முதலீட்டு விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அனைவருக்குமே விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சூழ்நிலை அமைவதில்லை. உழைப்பின் சன்மானமாகக் கிடைக்கும் ஊதியத்தை, வழக்கம்போல் வங்கிக் கணக்குகளிலோ, நகைகள் வாங்குவதிலோ முதலீடு செய்வதுதான் இன்றைய மக்களின் இயல்பு. இதில் எல்லாம் பல்வேறுவிதமான பண இழப்புகள் இருந்தாலும், அதற்கான மாற்று வழி தெரியாததால், அவர்கள் அதையே பின்பற்றி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, பண இழப்பே இல்லாத முதலீட்டு வழியான கமாடிட்டீஸில் முதலீடு செய்வது பற்றிய தகவல்களைத் தந்து உதவ வந்திருப்பதுதான் இந்த ‘கமாடிட்டியிலும் கலக்கலாம்!’ என்ற நூல். கமாடிட்டி சந்தையின் வரலாறு, கமாடிட்டி வர்த்தகத்தின் வகைகள், முதலீடு செய்யும் வழிமுறைகள் என கமாடிட்டீஸ் தொடர்பான அ முதல் ஃ வரையிலான அத்தனைக் கேள்விகளுக்கும் உரிய பதில்களை, எளிய செயல்முறை விளக்கங்களுடன் கூறியுள்ளார் நூலாசிரியர் வ.நாகப்பன். ‘நாணயம் விகடன்’ இதழில் இதே தலைப்பில் வெளிவந்த தொடருக்கு, வாசகர்களிடம் கிடைத்த சிகப்புக் கம்பள வரவேற்பின் வெளிப்பாடே இந்த நூல். கமாடிட்டி சந்தையில் கண நேரத்தையும் வீணாக்காமல் காசு அள்ள முயற்சிக்கும் அனைவருக்கும், இந்த நூல் நல்ல பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!